கர்நாடக மாநிலத்துக்கு போதுமான நிதியை ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் கட்சி பிப்ரவரி 7 ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. இந்த நிலையில் தென் இந்திய மாநிலங்கள் பொருளாதார கூட்டமைப்பு கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.

பட்ஜெட்டில் தென் மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை அடுத்து தனி நாடு கோரி குரல் எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. டி.கே. சுரேஷ் கடந்த சில தினங்களுக்கு முன் பேசியிருந்தார்.

டி.கே. சுரேஷின் இந்த பேச்சை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டித்திருந்தார்.

இருந்தபோதிலும், கடந்த 2018ம் ஆண்டு இதேபோன்ற ஒரு சூழலில் தென் மாநிலங்களின் கூட்டமைப்பை கேரளா வலியுறுத்தியது.

அப்போது கர்நாடகா முதல்வராக இருந்த சித்தராமையா-வும் இதனை ஆதரித்த நிலையில் ஆட்சி மாற்றம் காரணமாக இந்த பேச்சு கைவிடப்பட்டது.

தற்போது கர்நாடகாவில் மீண்டும் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் தென் இந்திய மாநிலங்களின் கூட்டமைப்பு பற்றிய பேச்சு மீண்டும் எழுந்திருக்கிறது.

பிப்ரவரி 7ம் தேதி கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெறும் நிலையில் இந்த போராட்டத்தை தொடர்ந்து கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக மாநில துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் கட்சி தலைவருமான டி.கே. சிவகுமார் “2018-19 ல் இருந்ததை விட 2024-25ல் மத்திய அரசின் பட்ஜெட் இருமடங்காக அதிகரித்துள்ளது இருந்தபோதும் மாநில அரசுக்கு வழங்கும் நிதி பங்களிப்பில் பெருமளவு மாற்றமில்லை” என்று கூறினார்.

மேலும், “2018-19 ம் ஆண்டு ரூ. 24.5 லட்சம் கோடியாக 2024-25ல் ரூ. 45 லட்சம் கோடியாக இருமடங்கு அதிகரித்துள்ளது ஆனால் கர்நாடகாவுக்கு 2018-19ல் 46,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த மத்திய அரசு தற்போது 50,000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநில அரசுகளை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட தேசிய கட்சி உறுப்பினர்களும் போராட வேண்டும்” என்று கூறினார்.

தவிர, “மத்திய அரசின் இந்த போக்கை கண்டித்து தென் இந்திய மாநிலங்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.