இசைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது கிராமி விருது.

ஒவ்வொரு ஆண்டும் பாப், ராக், நாட்டுப்புறம், ஜாஸ் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படும் இந்த கிராமி விருதின் 66வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் இந்தியாவைச் சேர்ந்த சங்கர் மகாதேவன் மற்றும் உஸ்தாத் ஜாகிர் உசேனின் சக்தி இசைக்குழுவின் திஸ் மொமன்ட்(This Moment) ஆல்பத்திற்கு சிறந்த உலகளாவிய இசை ஆல்பத்திற்கான கிராமி விருது கிடைத்துள்ளது.

சக்தி இசைக்குழுவில் வெளிநாட்டு கிடார் கலைஞர் ஜான் மெக்லாஃப்லின், இந்திய வயலின் கலைஞர் எல். சங்கர், உஸ்தாத் ஜாகிர் உசேன் மற்றும் டி.ஹெச். விக்கு விநாயக்ராம் ஆகியோர் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ‘திஸ் மொமன்ட்’ ஆல்பத்தில் மொத்தம் உள்ள 8 பாடல்களை ஜான் மெக்லாஃப்லின், ஜாகிர் உசேன், சங்கர் மகாதேவன், வி. செல்வகணேஷ் மற்றும் கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

சக்தி இசைக்குழுவை சேர்ந்த சங்கர் மகாதேவன், கணேஷ் ராஜகோபாலன் ஆகியோர் இந்த கிராமி விருதை பெற்றுக்கொண்டனர்.

66வது கிராமி விருதுகள் விழாவில் தபேலா கலைஞரான ஜாகிர் உசேனுக்கு மூன்று விருதுகள் கிடைத்தது. ஃப்ளூட் இசைக் கலைஞரான ராகேஷ் சவ்ராசியாவுக்கு 2 கிராமி விருதுகள் கிடைத்தது.

அதிக எண்ணிக்கையிலான இந்திய இசைக் கலைஞர்கள் இந்த ஆண்டு கிராமி விருதுகளை வாங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.