பெங்களூரு

பெங்களூரு விமான நிலையத்தில் கர்நாடகா காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளை சேர்ந்த 16 பேர் தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதை அடுத்து ஆட்சி கவிழும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி சபாநாயகரிடம் அளித்துள்ளார். இந்த தீர்மானத்தின் மீது வரும் 18 ஆம் தேதி வாக்களிப்பு நடக்க உள்ளது.

இந்த அதிருப்தி உறுப்பினர்களில் காங்கிரசை சேர்ந்த ரோஷன் பெய்க் என்பவரும் ஒருவர் ஆவார். பெங்களூரு நகரில் இயங்கி வந்த ஐ எம் ஏ ஜுவல் என்னும் நிறுவனத்தில் பலர் ரூ. 600 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவாக உள்ள இந்த நிறுவன அதிபர் மன்சூர் கான் வெளியிட்ட ஆடியோவில் ரோஷன் பெய்க் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழல் வழக்கு கர்நாடக காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழுவினரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த குழு ஏற்கனவே காவல்துறை உள்ளிட்ட பல அரசுத்துறை அதிகாரிகளை கைது செய்துள்ளது. இன்று காங்கிரஸ் அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பெய்க் பெங்களூருவில் இருந்து வெளியூர் செல்ல விமான நிலையம் சென்றுள்ளார்.

அவர் சிறப்பு விசாரணை குழுவினரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்ட போது அவருடன் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியாளர் சந்தோஷ் என்பவர் உடன் இருந்ததாகவும் தகவல்கள் வெளி வந்துள்ளன. அரசு தரப்பில் இருந்து இன்னும் கைது குறித்த செய்தி உறுதி செய்யப்படாமல் உள்ளது.