சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடக காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், டெல்லியில் நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரியில், தமிழ்நாட்டுக்கு மாதந்தோறும் திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு திறந்து விடாமல், தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. இதனால் குறுவை சாகுபடி தண்ணீரின்றி காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு மத்தியஅரசு, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று குழு மூலம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றமும், காவிரி ஆணைய உத்தரவின்படி தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டது. பின்னர், கடந்த 26ந்தேதி (செவ்வாய்கிழமை ) நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு 18 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தண்ணீரை திறந்து விடாமல், அம்மாநில கட்சிகளைக் கொண்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், திமுக அரசு, கூட்டணி கட்சியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் பேச மறுத்து வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகும், கர்நாடக காங்கிரஸ் அரசு, காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு மீண்டும் மறுத்துள்ள நிலையில், டெல்லியில் நாளை (29ந்தி) காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அவசர கூட்டத்தில் பங்கேற்கும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு மீண்டும் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.