பெங்களூரு:

நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதுவரை வெளிவந்துள்ள வாக்குகள் எண்ணிக்கையின்படி,  காங்கிரஸ், பாஜ இரு கட்சிகளும்  சமஅளவிலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதே வேளையில் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கணிசமான இடங்களில் முன்னேறி வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் ஏற்படவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும், தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற எக்சிட் போல் கருத்துக் கணிப்பிலும் கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்பிருப்பதாகவே பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.

குலாம்நபி ஆசாத்

இந்நிலையில் இன்றைய வாக்கு எண்ணிக்கையும் அதை நிரூபிக்கும் வகையிலேயே நிகழ்ந்து வருகிறது.

ஏற்கனவே கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் வெற்றிபெறும் சுயேச்சை வேட்பாளர்களையும், மதசார்பற்ற ஜனதா கட்சி வேட்பாளர்களை இழுக்கும் பணியில் தேசிய கட்சிகள் இறங்கி உள்ளதாகவும், இதன் காரணமாக குதிரைபேரம் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், கர்நாடகாவில் தொங்கு சட்டமன்றம் அமைந்தால்,  மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராகும் என தகவல்கள் வெளியானது.

அதற்கேற்றால்போல, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாப் நபி ஆசாத் நேற்றே கர்நாடகா வந்து முகாமிட்டுள்ளார்.

இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தொடர்ந்து குலாப்நபி ஆசாத், மதசார்பற்ற ஜனதாதள தலைவர் களை சந்திக்க சென்றுள்ளார். அவர்களுடன் பேசி, மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி ஆதரவுடன் கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதே நேரத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் பங்குபெற விரும்பினால், அதை ஏற்று காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

,இதன் காரணமாக கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாளம் கூட்டணி ஆட்சி ஏற்படப்போவது 90 சதவிகிதம் உறுதியாகி உள்ளது.