மங்களூரு: குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்களூரு நகரில் கர்நாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அறிவித்த உதவித்தொகையை அம்மாநில முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார்.

மங்களூரு போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா.

பெங்களூருவின் பல பகுதிகளிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்து தடையுத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலைமை சென்றது.

இந்நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் இதர காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எடியூரப்பா.

பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது, “மங்களூரு சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவருக்கும் அதில் தொடர்புள்ளதா? என்பது குறித்து விசாரிக்கப்படும். அப்படி தொடர்பிருப்பது உறுதியானால், அவர்களின் குடும்பங்களுக்கான உதவித்தொகை வழங்குவது குறித்து ஆலோசித்தே முடிவு செய்யப்படும்” என்றார்.

கர்நாடக முதல்வரின் இத்தகைய முடிவு சர்ச்சையையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.