பெங்களூரு:

ர்நாடகாவில் இன்று 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

காங்கிரஸ்-மதசார்ப்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 17 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குமாரசாமி அரசுக்கு எதிராக ராஜினாமா செய்ததால், அவர்களை  சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தர விட்டார். அந்த தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் நடக்கிறது.

அதன்படி இன்று 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் போட்டியிட 248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி இல்லாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். தற்போது, தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள். இந்த தேர்தலில் மொத்தம் 37.78 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர்.

இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். .இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வாக்காளர்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா வேண்டுகோள் விடுத்தார்.