பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா சட்டசபையில் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. அதன்படி,  இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், மதம் மாற்றம் செய்யும் நிறுவனங்களுக்கு 10ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

தமிழகம் முழுவதும் நாடு முழுவதும் மதமாற்றங்கள் பரவலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக வறுமையில் வாடும் மக்களை குறிவைத்து இந்த மத மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும்படி பல மாநிலங்களில் புகார்கள் எழுந்துள்ளன. அதைத்தடுக்க குஜராத், உ.பி. போன்ற மாநிலங்களில் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலத்திலும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. மேலும் சில இடங்களில் மோதல்கள் ஏற்பட்டன. இதை தடுக்க அங்கு கட்டாய மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக அம்மாநில  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அதன்படி, கர்நாடக சட்டப்பேரவையில்,  கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா கர்நாடக சட்டசபையில் நேற்று  நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாக, மதம்மாற விரும்புகிறவர்கள் மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் 2 மாதங்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும்;

மதம் மாறினால் ஜாதிய அடிப்படையிலான அனைத்து இடஒதுக்கீடு சலுகைகளும் கிடைக்காது. எந்த மதத்தில் சேருகிறாரோ அந்த மதம்சார்ந்த சலுகைகளை மட்டுமே பெற முடியும்.

கட்டாய மதமாற்றம் செயலில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்; மேலும் ரூ25 ஆயிரம் பராதம் விதிக்கப்படும்;

சிறுவர்கள், பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினரை கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ50 ஆயிரம் அபராதமும் விதிக்க வகை செய்கிறது.

திருமணத்துக்காக கட்டாயமாக மதம் மாற்றம் செய்தால் அந்த திருமணங்கள் செல்லாது;

கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்;

மதமாற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் (ஊழியங்கள்) அதாவது கூட்டாக மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது.