பெங்களூரு:

ர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ள நிலையில், கர்நாடகா அரசியலமைப்பின் என்கவுண்டர் தொடங்கிவிட்டதாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்து உள்ளார்.

 

நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களை மட்டுமே கைப்பற்றிய பாஜவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து இன்று காலை கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில்,   ”கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கிவிட்டது. இனி மக்கள் எந்த  பிரச்சினையில்  சிக்குகிறார்கள் என்ற எந்த தகவலும் வெளியே வராது. ஆனால் எம்எல்ஏக்கள் எங்கே செல்கிறார்கள், எந்த சொகுசு விடுதியில் எந்த எம்எல்ஏ இருக்கிறார் என்ற புகைப்படம், அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக பிரேக்கிங் செய்திகள் வரப்போகிறது. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக தேர்தலில் மத்திய பாஜ அரசுக்கு எதிராக குரல் கொடுத்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். சமூக ஆர்வலரும், குஜராத் மாநில எம்எல்ஏவுமான ஜித்தேஷ் மேவானியுடன் இணைந்து பல இடங்களில் பாரதியஜனதாவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.

இதன் காரணமாக பாஜவின் கோபத்துக்கான ஆளான பிரகாஷ்ராஜுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.