கர்நாடகா : கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் – அர்ச்சகர் கைது

Must read

குல்பர்கா

குல்பர்கா மாவட்டத்தில் உள்ள கர்டகி சிற்றூரில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் விதித்ததாக அர்ச்சகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் பல இடங்களில் இன்னும் தீண்டாமை தலை விரித்து ஆடுவதாகப் பல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.  அவ்வகையில் கடந்த வாரம் கொப்பல் அருகே ஒரு கோவிலுக்குள் ஒரு 4 வயது தலித் குழந்தை நுழைந்ததால் ரூ.25000 அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.   அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகா மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த கங்காதர்(24) என்னும் தலித் வகுப்பைச் சேர்ந்த இளைஞர் கடந்த 14-ம் தேதி கரடகி கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலுக்குச் சென்று சிறப்புப் பூஜை செய்தார்.  இவர் பூஜை முடிந்து வெளியே வந்ததைக் கண்ட கோயில் அர்ச்சகர் பசவராஜ், பதிகர் கரடகி கிராமத்தை சேர்ந்த ஊர் பெரியவர்கள் ரேவண்ணா சுவாமி, சேகரப்பா, சரணப்பா, பிரஷாந்த், பசவராஜ், கடப்பா நாயக் ஆகியோரை அழைத்து ஊர் பஞ்சாயத்து கூட்டியுள்ளார்.

கங்காதர் கடந்த 20-ம் தேதி கோயிலில் பூஜை செய்ததற்காக பஞ்சாயத்தில்  ரூ.11,000 அபராதமாக வழங்கியுள்ளார்.  மேலும் இன்னும் ஒருமாதத்தில் ரூ.5 லட்சம் அபராதத்தை தருவதாக பஞ்சாயத்தார், எழுதி வாங்கியுள்ளனர்.  இந்த தகவல் அறிந்த தலித் சங்கர்ஷ சமிதி அமைப் பினர் குல்பர்கா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஸ்ரீதராவிடம் புகார் அளித்தனர்.

புகாரை விசாரித்த காவல்துறையினர் அர்ச்சகர் பசவராஜ் பதிகர், ரேவண்ணா சுவாமி, சேகரப்பா, சரணப்பா, பசவராஜ், கடப்பா நாயக் உள்ளிட்ட 8 பேர் மீது எஸ்.சி., எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் 504, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இதையொட்டி 8 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

More articles

Latest article