பெங்களூரு

ரும் ஜனவரி 25 அன்றும், பிப்ரவரி 4 அன்றும் கர்னாடகா வர உள்ள பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் நடத்த கன்னட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

கர்னாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் “பரிவர்த்தன யாத்திரை” என்னும் மூன்று மாத பயணம் வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி மைசூருவில் நிறைவு பெறுகிறது.    அப்போது ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் அங்கு நடைபெற உள்ளது.   அதில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்துக் கொள்கிறார்.    பிப்ரவரி மாதம் 4அம் தேதி அன்று பெங்களூருவில் நடைபெற உள்ள பாஜக தொண்டர்களின் பேரணியில் பிரதமர் மோடி கலந்துக் கொள்கிறார்.

இந்த இரு தினங்களிலும் கதவடைப்பு நடத்தப் போவதாக கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.    ஜனவரி 25 அன்று கர்நாடகா மாநில கதவடைப்பு போராட்டமும்,  பிப்ரவரி 4 அன்று பெங்களூரு நகர கதவடைப்பு போராட்டமும் இந்த அமைப்புகள் நடத்த உள்ளன.     அண்டை மாநிலமான கோவாவுடனான மகாதாயி நதிநீர் பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டு சுமுக முடிவு கொண்டு வருவதற்காகவும்   இது வரை அவ்வாறு செய்யாததற்காகவும் பிரதமருக்கும் அமித் ஷாவுக்கும் தங்கள் எத்ர்ப்பை காட்ட இந்த போராட்டத்தை நடத்த உள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இது குறித்து கன்னட அமைப்பு ஒன்றின் தலைவரும் கதவடைப்பு போராட்ட அமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ்,”மோடி எல்லாவற்றிலும் தன் அரசியல் விளையாட்டைக் காட்டுகிறார்.   மும்பையிலும் கர்நாடகாவிலும் குடி தண்ணீர் பஞ்சம் கடுமையாக உள்ளது.   ஆனால் பாஜக ஆளும் கோவா மாநிலத்தில் இருந்து தண்ணீர் திறந்து விட பிரதமர் உத்தரவு இடவில்லை.    எங்கள் வாக்கு தேவை எனில் அவர்கள் பாஜகவினராக மட்டும் இல்லாமல் கன்னடர்களாகவும் இருக்க வேண்டும்.   எனவே பிரதமருக்கும் அமித் ஷாவுக்கும் எதிராக அந்த இரு கதவடைப்பு நாட்களிலும் கருப்புக் கொடி காட்ட திட்டுமிட்டுள்ளோம்.”  எனக் கூறி உள்ளார்.

இந்த கதவடைப்பு போராட்டத்தில் கலந்துக் கொள்வதைப் பற்றி இன்னும் சில கன்னட அமைப்புகள் எதுவும் கூறவில்லை.    மாநிலத்தின் மிகப்பெரிய கன்னட அமைப்பான கர்னாடகா ரக்‌ஷன வேதிகாவின் தலைவர் நாரயண கவுடா  இது குறித்து தாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை எனக் கூறி உள்ளார்.   இதற்கு முன்பு நடந்த பல போராட்டங்களில் இந்த அமைப்பு கலந்துக் கொள்ளவில்லை.   அப்போதெல்லாம் கதவடைப்பு போராட்டம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

மாநில பாஜக தலவர் எடியூரப்பா, “இது காங்கிரஸ் கட்சி மறைமுகமாக நடத்தும் கதவடைப்புப் போராட்டம்.    காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் படிப்படியாக செல்வாக்கை இழந்து வருகிறது.  எனவே இது போல கதவடைப்பு போராட்டம் நடத்த சில கன்னட அமைப்புகலை தூண்டி வருகிறது.   பிரதமருக்கும் அமித்ஷாவுக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதால் அவர்களுக்கு அதிக கூட்டம் கூடுவதால் காங்கிரஸுக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது”  எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாநில முதல்வர் சித்தராமையா, “இதற்கு முன்பு எடியூரப்பா ஆட்சி செய்யும் போதும் இது போல பல போராட்டங்களை கன்னட அமைப்புகள் நடத்தி உள்ளன.    ஆனால் நாங்கள் அப்போது பாஜகவினரை குற்றம் சாட்டவில்லை.   இந்த அமைப்புகள் எந்தக் கட்சியையும் சாராதவை.   கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி மீது மக்களுக்கு அதிருப்தி அதிகமாகியுள்ளது.    அதை திசை திருப்ப இவ்வாறு காங்கிரஸ் மீது பாஜக பழி போடுகின்றனர்”  எனத் தெரிவித்துள்ளார்.