கணினிப் பூக்கள்

கவிதைத் தொகுப்பு – பகுதி 22

பா. தேவிமயில் குமார்

இயற்கையோடு இணையலாம்

மேகத்தின் ஒரு கீற்றில்
காற்றாக, நுழைகிறேன்!

சூரிய கிரணங்களில்
பரணமைத்து
புது மனை புகுகிறேன்!

வெள்ளி நீரோடையில்
வளையல் செய்து
வானவில்லுக்கு
அணிவிக்கிறேன்!

அருகம்புல்லின் நுனியில்,
ஆகாய ஊஞ்சல் ஆடுகிறேன்!

புற ஊதா கதிர்களில்
பயணித்து புளூட்டோ வின்,
கண்ணீரை துடைக்கிறேன்!

கருப்பு நிற மலர்
கிடைக்கவில்லை என
காத்திருக்கிறேன்…
கடவுளிடம் வேண்டி!

அழிவில் இருக்கும்
ஆதி வாசிகளின்
கூட்டத்தில் ஒரு
குழந்தையாக
இருக்கிறேன்!

பருவ காற்று பாதை மாறி
பயணிக்கும் போது
பாவம்,மனிதர்கள்
வா என அழைக்கிறேன்!

குளத்தில் கிடக்கும்
சந்திரனை
சிறை வைத்த
இரவை நீதி மன்றத்தில்
நிற்க வைக்கிறேன்!

இப்படி பல கனவுகள்
எப்போதும் எனக்குள்!
இயற்க்கை உறவின்
ஏக்கங்கள்….என்றன்
இதயத்தில்!

என்ன செய்வது?
காட்டை அழித்து
யானை தந்தத்தில்
செய்த பொம்மையை
இணைய தளத்தில்
ஏலம் எடுக்கும்
எங்கள் மனித கூட்டம்!!!

எப்படி இணைவது
இயற்கையோடு
இப்படிபட்ட பேராசை
மனிதர்கள் மத்தியில்?