டில்லி:

முத்தலாக் மசோதா விவகாரத்தில் அதிமுகவின் நடவடிக்கை வெட்கக்கேடானது என்று திமுக.எம்.பி. கனிமொழி காட்டமாக டிவிட்டியுள்ளார்.

பெரும் எதிர்ப்புக்களுக்கு இடையே பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் முத்தலாக் மசோதா நிறைவேறி உள்ளது. இந்த மசோதாமீதான விவாதத்தின்போது, மக்களவையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வரவேற்பு தெரிவித்தார். அதே நேரத்தில், நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதிமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், வாக்கெடுப்பின்போது, அரசை எதிர்த்து வாக்களிக்காமல், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், திமுக எம்.பி. கனிமொழி அதிமுகவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,

முத்தலாக் மசோதா வெற்றி பெறுவதற்கு வசதியாக ராஜ்ய சபாவில் அதிமுக வெளிநடப்பு செய்தது வெட்கக்கேடானது.

என்று காட்டமாக  விமர்சித்துள்ளார்.

முத்தலாக் தடை மசோதா மீது  நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நடைபெற்ற  வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிர்ப்பு தெரிவித்து 84 பேரும் வாக்களித்த நிலையில் முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.

மாநிலங்களவையில் பாஜகவுக்கு போதிய பலம் இல்லாத நிலையில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் மட்டுமின்றி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பகுஜன் சமாஜ் கட்சி,, தெலுங்கு தேசம், உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்த நிலையில் இந்த மசோதா எளிதாக நிறைவேறிவிட்டது. இனி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரின் ஒப்புதலுக்கு பின் சட்டமாக்கப்படும்.