சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த மாதம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அந்த பதவி, திமுக எம்.பி. கனிமொழிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திமுகவின் 15 வது உட்கட்சித் தேர்தல் கடுமையான போட்டிகளுக்கு இடையே நடைபெற்ற நிலையில், தலைவர், பொதுச் செயலாளா், பொருளா ளா் ஆகியோரை தோ்ந்தெடுக்க அக்டோபர் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு தனியார் பள்ளியில் கூடுகிறது. அக்டோபர் 9ந்தேதியன்று காலை 9 மணிக்கு அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் திமுக பொதுக்குப கூட்டம் நடைபெறுகிறது.
அன்றைய தினம், தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா். இதற்கனா வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், திமுகவின் 5 துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த செப்டம்பர் மாதம் 20ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, அந்த பதவி திமுகவில் மகளிருக்கான துணைப் பொதுச்செயலாளர் பிரதிநிதித்துவ அடிப்படையில், கனிமொழி எம்.பி நியமனம் செய்யப்பட உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
திமுகவின் மகளிர் அணி செயலாளராக உள்ள கனிமொழி, புதிய நிர்வாகியை தேர்ந்தெடுக்கும் வரை மகளிர் அணி பொறுப்பையும் கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.