இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நடிகை கங்கனா ரணாவத், டி.வி. ஒன்றில் பேட்டி அளித்திருந்தார்.

அந்த பேட்டியில், இந்தி சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

“சுஷாந்த் மரணத்துக்கு மும்பை சினிமா உலகில் உள்ள மாபியா கும்பல் காரணம். இவர்கள் ஒரு கோஷ்டியாக செயல் படுகிறார்கள். இந்த கோஷ்டியுடன் தொடர்பு வைத்துள்ளார், ஜாவேத் அக்தர்” என கங்கனா தெரிவித்து இருந்தார்.

கங்கனாவின் பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிஞர் ஜாவேத் அக்தர், மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார்.

ஜாவேத் அக்தர் புகார் குறித்து விசாரித்து, அறிக்கை அளிக்குமாறு ஜுகு போலீசாருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது.

ஜுகு போலீசார் இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளனர்.

https://twitter.com/KanganaTeam/status/1356240212960149508

“கங்கனா மீது ஜாவேத் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தலாம்” என அந்த அறிக்கையில் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த வழக்கில் ஆஜாராகுமாறு கங்கனாவுக்கு, நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த சம்மனுக்கு பதில் அளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் “குள்ளநரி கூட்டத்தில், நான் ஒரு பெண் சிங்கம்” என பதிவிட்டு மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார், கங்கனா ரணாவத்.

– பா. பாரதி