கோவை: காலில் மீண்டும் வீக்கல் ஏற்பட்டுள்ளதால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து கமல்ஹாசன் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். தாம் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியிலும் அவர் வாக்குச் சேகரித்து வருகிறார்.

கோவை நகர் பகுதிகளில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி செல்லும்போது வாக்குகள் சேகரித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதேபோல், இன்று  காலை பூ மார்க்கெட், ஆர்.எஸ்.புரம் பகுதியில் கமல்ஹாசன் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது கமலுடன் பேசவும், போட்டோ எடுக்கவும் மக்கள் ஆர்வம் காட்டினர். கூட்டத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருடைய காலை பொதுமக்களில் சிலர்  மிதித்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தால் கமலுக்கு காலில் வீக்கம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கமல்ஹாசன் சென்று மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொண்டார்.

காலில் வீக்கம் இருப்பதால், கண்டிப்பாக ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, கமல்ஹாசன் ஓய்வில் இருக்கிறார்.