குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் செல்போன் செயலியை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்

Must read

 

 

சென்னை:

குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் புதிய செல்போன் செயலியை  கமல்ஹாசன் துவங்கிவைத்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில் ஆப்’ என்ற புதிய செயலியை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று துவங்கி வைத்தார்.

பிறகு அவர் பேசியதாவது:

“பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை சாமானியர்களும் செய்யத்தூண்டும் ஒரு செயலி தான் ‘மய்யம் விசில் ஆப்’ ஆகும். பத்திரிகையாளர்களின் பலம் சாமானியருக்கு இருக்காது. பத்திரிகையாளர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் செயல்படுவார்கள். நம்மை சுற்றி நடக்கும் சூழல் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவைகளை தனிமனிதன் ஊதி தெரியப்படுத்தும் அபாய சங்கு தான் ‘விசில் ஆப்’.

இருக்கும் குறைகளை எல்லாம் ஒரே நொடியில் தீர்த்து வைக்கும் மந்திரகோல் இது அல்ல. இது இருக்கும் குறைகளை நாம் செவி சாய்த்து கேட்பதற்கும், கண் கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒரு கருவி. இந்த கருவி மூலம் கிடைக்கும் தகவல் எல்லாம் எங்களுக்கு வீட்டுப்பாடம் ஆகும்.

தற்போதைக்கு இதை மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கையில் மட்டுமே கொடுக்கிறோம். அதற்கு தற்காப்பு ஒரு காரணம். மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் செய்வார்கள் என்பதும் ஒரு காரணம். இது காவல்துறைக்கோ, அதிகாரிகளுக்கோ, அரசுக்கோ மாற்று அல்ல. அவர்களுக்கு உதவி செய்யும் ஒரு கருவியாக அல்லது விமர்சனம் செய்யும் கருவியாக இருக்குமே தவிர, அதற்கு மாற்று அல்ல.

இந்த செயலியை பயன்படுத்தும் நேரம் நாளைக்கு (இன்று) வருகிறது. நாளைக்கு (இன்று) கிராம பஞ்சாயத்துகள் நடக்கிறதா? என்பதை கண்காணிக்கவும், நல்லபடி நடந்தால் அதை பாராட்டவும், நடக்கவே இல்லை என்றால், ஏன் நடக்கவில்லை என்பதை எங்களுக்கு தெரியப்படுத்தவும் இது பயன்படும்

நாளை (இன்று) நாங்கள் தத்தெடுத்துக்கொண்ட அதிகத்தூர் பஞ்சாயத்து கிராம சபை கூட்டம் நடக்க இருக்கிறது. நாங்கள் அதை தத்து எடுத்தவர்கள் என்ற உரிமையில் அங்கே செல்கிறோம். கிராம சபை கூட்டத்தில் பங்கெடுக்க அனுமதி கிடைத்தால் பங்கெடுப்போம். இல்லையேல், அந்த கிராமத்தை சுற்றி வந்து குறைகளை கேட்டறிந்து ஆவன செய்ய முற்படுவோம். சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த கிராமத்துக்கு நாளை (இன்று) நான் செல்ல இருக்கிறேன்” என்று கமல் பேசினார்.

‘மய்யம் விசில் ஆப்’ குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கிருஷ்ணபிரசாத், அபிஷேக் ஆகியோர் தெரிவித்ததாவது:

‘மய்யம் விசில் ஆப்’-பை மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் மட்டுமே உபயோகப்படுத்த முடியும். இதனை எங்கு இருந்து பதிவிறக்கம் செய்து கொண்டாலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்குள் இருந்தால் மட்டுமே புகார்களை தெரியப்படுத்த முடியும்.

சாதாரண குடிமகன் மற்றும் கள வீரர், வீராங்கனைகள் (தன்னார்வலர்கள்) என இரு பிரிவுகளில் புகார்களை தெரியப்படுத்த முடியும். இவ்வாறு சாதாரண குடிமகன் மற்றும் தன்னார்வலர்களால் தெரியப்படுத்தப்பட்ட புகார்களை ஆய்வு செய்ய 5 தன்னார்வலர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

அதில் 3 பேர் புகாரின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்தால் மட்டுமே புகார் நிர்வாகிக்கு அனுப்பப்பட்டு, அவர் அனுமதி அளித்த பின்னர் புகார் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகே இதர பயன்பாட்டாளர்கள் அந்த பிரச்சினையை பார்க்க முடியும்.

ஊழல் பிரச்சினை மற்றும் அவசர பிரச்சினைகளுக்கு என சிறப்பு பொத்தான்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழல் பிரச்சினைக்கான பொத்தானை தேர்வு செய்பவர்களின் பெயர் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.

ஒருவர் தன்னை சாதாரண குடிமகன் பிரிவில் இருந்து கள வீரர், வீராங்கனைகள் பிரிவுக்கு மாற்றிக்கொள்ளவும் முடியும். அதே போன்று, தங்களுக்கு தேவையான மொழியையும் தேர்வு செய்து கொள்ளலாம்” என்று  தெரிவித்தனர்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் முதல் கலந்தாய்வு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இதில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு ‘மய்யம் விசில் ஆப்’ குறித்தும், கிராம சபைகள் குறித்தும் உரையாற்றினார்.

 

More articles

Latest article