2. கமலின் நாத்திகமும்,  கருப்புச் சட்டை பாசமும்

ன்பே சிவம் திரைப்படம் நடித்ததால் கம்யுனிஸ்ட்கள் பலரு்ககு கமலை பிடிக்கும்.  ஆனால் அந்த படத்தில் எங்கும் கம்யுனிச சிந்தனை போதிக்கப்படவில்லை.  நீயும் கடவுள் நானும் கடவுள் என்று படம் முழுவதும் மாதவனிடம் ஆன்மீக பிரச்சாரம் செய்கிறார்.   இதுதான் கம்யுனிச சிந்தாந்தமா? படத்தில் கம்யுனிசமும் இல்லை நாத்திகமும் இல்லை.  ஒவ்வொருத்தருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்.  ஜீவாத்மா வேறு பராமாத்மா வேறு அல்ல என்பது அத்வைத தத்துவம்தானே.

இந்த தத்துவத்தை கி.பி 8 ம் நூற்றாண்டில்,  ஆதிசங்கரர் சொல்லிவிட்டாரே.  அந்த ஆதிசங்கரர் தத்துவத்தைதான் கமல் 2001ல் சொல்லியிருக்கிறார்.  இது எப்படி கம்யுனிச பிரச்சார திரைப்படமாகும்.

அப்படியே அரைகுறையாகவாவது கம்யுனிசம் பேசினாரே கமல்ஹாசன் என்று எடு்ததுக் கொண்டாலும் விசுவரூபம் படத்தில் தன்னுடைய அமெரிக்க சார்பை காட்டியவர்தான்.

தசாவதாரம் திரைப்படத்திலும் உலகை காப்பாற்ற அமெரிக்க விஞ்ஞானி என்கிற பெயரில்தான் வருவார்.  கடைசி காட்சியில் ஜார்ஜ் புஷ் கமலை பாராட்டுவார்.  மூன்றாம் உலகநாடுகளின் மீதும் அரேபியநாடுகளின் மீதும் போர்தொடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தனது வணிக நலனிற்காக பெருமைபடுத்தி காட்டும் கமலை கம்யுனிஸ்ட்டாக எப்படி ஏற்கமுடியும்.?

கமலின் நாத்திகமும்,  கருப்புச் சட்டை பாசமும்

கமல் எப்போதும் தன்னை நாத்திகராக காட்டி கொள்பவர். இந்து மக்கள் கட்சி தன் மீது வழக்கு போட்டபோது கூட, தான் ஒரு கருப்புச்சட்டைக்காரன் என்று கூறிக் கொண்டார்.  .  இவர் உண்மையில் கருப்புச் சட்டை கோட்பாடு உடையவராக இருந்தால் நீட் தேர்வில் சமூக நீதியும், மாநில உணர்வும் பறிபோகிறது என்று  உரிமைக்குரல் எழுப்பியிருக்க வேண்டும் அல்லவா.?  ஏன் எழுப்பவில்லை.  எடப்பாடியிடம் பொங்கி எழும் கருப்புச் சட்டைக்காரர் நடுவண் அரசிடம் ஏன் மௌனம் காக்கிறார்.?

தன்னுடைய படங்களில் நாத்திகம் பேசும் கமல்ஹாசன், சமூகநீதி ஏன் பேச மறுக்கிறார்.?

உன்னால் முடியும் தம்பி படத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிரான வசனம் வரும்.  அது பாலச்சந்தர் படம் ,  கமல் படமல்ல என்று யாராவது விளக்கம் தரலாம். விருமாண்டி பட சர்ச்சையின் போது, கமல் ஒரு கேள்வி கேட்டார், “சாதி கூடாதுன்னு  சொல்றீங்க ஆனால், மக்கள் தொகை கண்க்கெடுப்புல சாதி கேட்குறீங்க” . இதுதான் கமல் கேட்ட கேள்வி.

பெரியாரின் அடிப்படைக் கொள்கை வகுப்புவாரி பிரதிநிதித்துவம். மக்கள் தொகை அடிப்படையில் சமூக பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதுதான் கருப்புச் சட்டையின் அடிப்படை கோட்பாடே.  ஆனால்,இந்த கருப்புச் சட்டை கமலோ,சாதி வாரி இடஒதுக்கீட்டிற்கு எதிராக குரல்எழுப்புகிறார்.

20 வருடங்களுக்கு முன்னால்,சாதி வெறிபிடித்த ஆசிரியரின் பிரம்படியால் ஒருதலித் சிறுமியின் கண் பறிபோனது.  அப்போது கமல் எழுதிய கவிதை மிக பிரபலம்.  அப்போது முற்போக்காளர்கள் மத்தியில் பாராட்டைப்பெற்ற கமல்தான், தற்போது சேரி பிகேவியர் என்பது சமூகத்தில் இருக்கிற சொல்தான்.  அதை விட மோசமாக வார்த்தை சமூகத்தில் இருக்கிறது என்று மழுப்புகிறார்.  சேரி பிகேவியர் என்கிற வார்த்தையை சொன்ன காய்த்ரியை ஒப்புக்காக கூட அவர் கண்டிக்கவில்லை.

தன்ககு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கதாநாயகன் பேசிய எத்தனையோ படங்கள் வெளி வந்திருக்கின்றன.  விஜயகாந்தின் சிவப்பு மல்லி,  சத்யராஜ் நடித்த பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். கமலகாசன் நாத்திகனாக நடித்த ஒரு படத்தையாவது கூறமுடியுமா?.

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன் இதுதான் கமலின் நாத்திக த்த்துவம்.  இதை நாத்திகம் என்று ஆத்திகவாதிகளே ஏற்கமாட்டார்களே!  அப்புறம் எப்படி பெரியாரியர்கள் ஏற்பார்கள்.? நாத்திகர் என்கிற போர்வையில் அழுத்தமான ஆத்திகப்பிரச்சாரத்தைதான் கமல் தொடர்ந்து செய்துவருகிறார். கருப்புச் சட்டை கொள்கைக்கும் கமலுக்கும் துளியும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.  ஆக, கமல் கண்டிப்பாக திராவிட முகமல்ல என்பது உறுதி.

தமிழ்தேசிய பார்வையில் கமல்ஹாசன்

அழுத்தமாக தமிழில் பேசக்கூடியவர்.  அவ்வப்போது தமிழில் கவிதையும் படைக்ககூடியவர். கமலுக்கு தமிழ்தேசிய முகம் பொருத்தமாக இருக்குமா ?  என்பதை பார்ப்போம். இவர் நடத்தும் பிரபலநிகழ்ச்சியில், தமிழ் தாய் வாழ்த்து அவமானப்படுத்தப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்தை கொட்டாவியுடன் பாடினர். ஏன் அவ்வாறு நிகழ்ந்தது? என்கிற கேள்விக்கு தமிழ்தாய் வாழ்த்தை சொல்லிக் கொடுத்தோம் என்கிறார் கமல். இந்திய தேசிய கீதத்தை அவமானபடுத்தி கமல் இப்படி செய்வாரா. ஒரு படத்தில் தேசிய கீதத்தை அவமதிப்பவனை அடித்து துவம்சம் செய்கிறார்.ஆனால்,தமிழ்தாய் வாழ்த்தை அவமதித்தால், ஆதரவு தருகிறார்.

இதுமட்டுமல்ல, எப்போதெல்லாம் காவிரி பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம், கமல காசனுக்கு இந்தியன் என்கிற உணர்வு மேலிடும். அந்த சமயத்தில் தமிழன் என்று ஒருபோதும் வாய் திறந்து சொல்லமாட்டார்.

தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு தமிழ்நாடு திரைப்பட சங்கம் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வந்தபோது, இந்திய திரைப்பட சங்கம் என்கிற பெயர் பொருத்தமாக இருக்கும் என்று முன்மொழிந்தவர் கமலகாசன்.

அப்போது,ரஜினிகாந்த் தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று பெயர் வைக்கவேண்டும் என்கிற கோரிக்கையை ஆமோதித்தார். ஆனால் பரமக்குடி பச்சைத்தமிழரோ இந்தியர் என்று மார் தட்டினார்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது விஜயகாந்த் காவிரி நதிநீருக்காக திரையுலகையே ஒருங்கிணைத்து நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். கமல் ஈழப்பிரச்சனைக்காக, தமிழர்களின் வாழ்வாதாரத்திற்காக ,,திரையுலகினரையோ, தனது நற்பணி மன்றத்தினரையோ ,பயன்படுத்தியிருக்கிறாரா? என்கிற கேள்வி எழுகிறது..

தற்போது நடக்கும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு,  கதிராமங்கலம் குறித்து அவரது கருத்து என்ன என்று வெளியிட்டிருக்கிறாரா.? செய்தி ஊடகங்களில் அமைச்சர்களின் ஊழல் குறித்து மட்டுமா செய்திகள் வெளிவருகிறது?. மக்கள் போராட்டங்கள் குறித்த செய்திகள் கமல் கண்ணிற்கு படவில்லையா? என்கிற அய்யம் நமக்கு எழுகிறது.

(ரஜினி – விஜயகாந்த் – கமல்.. ஒரு ஒப்பீடு – அடுத்த பகுதியில்)