சென்னை:

கிரிக்கெட்  ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக் ) கிரிக்கெட் போட்டியின்  2-வது சீசன் தொடக்க விழா இன்று  சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இன்றைய தொடக்க விழா போட்டியில், சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டனும், இந்திய அணியின்  முன்னாள் கேப்டனுமான தோனி கலக்க இருக்கிறார். இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர் பார்ப்பு திகழ்கிறது.

முதல் நிகழ்வாக சிக்ஸர் போட்டி நடக்கவுள்ளது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளார்.

தொடக்க விழாவான இன்று நடைபெற இருக்கும் சிக்ஸர் போட்டியில் தோனியுடன், முன்னாள் சிஎஸ்கே வீரர்களான மேத்யூ ஹைடன், பத்ரிநாத், பவான் நேகி, அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

இதில் இவர்கள் பந்து வீச்சு கருவியின் மூலம் வரும் பந்துகளை எதிர்கொண்டு சிக்ஸருக்கு பறக்க விட வேண்டும். இது மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளது. அவர்களுடன் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான  பாலாஜி, முரளி விஜய், மற்றும் தமிழகத்தின் ஆல் ரௌண்டர் கணபதி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

டிஎன்பிஎல் 2-வது சீசனின் முதல் போட்டி இன்று இரவு  7.15 மணிக்கு தொடங்கவுள்ளது.  இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான தூத்துக்குடி டியூட்டி பேட்ரியாட்ஸ் அணியும் விளையாடவுள்ளன.

சென்னை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய 3 இடங்களில் மொத்தம் 32 போட்டிகள் நடக்க வுள்ளன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைக்கா கோவை கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர் ஜெயன்ட், டியூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருவள்ளுர் வீரன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் ஒவ்வொரு  அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இதனையடுத்து ஆகஸ்ட் 15 -ம் தேதி முதல் தகுதிச் சுற்றும், 16 -ம் தேதி எலிமினேட்டரும் நடைபெறும். 18-ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்றும் 20-ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளன.

இந்தப் போட்டிக்கான மொத்தப் பரிசுத் தொகை ரூ. 3.4 கோடியாகும்.

இதில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணி 1 கோடியையும், 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ. 60 லட்சம் பரிசாக பெறும். 3, 4 இடங்களை பெறும் அணிக்கு ரூ. 40 லட்சமும், 5 முதல் 8 வது இடத்தை பிடிக்கும் அணிக்கு தலா ரூ. 25 லட்சமும் வழங்கப்படும்.

இத்தொடரின் அனைத்து போட்டிகளும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.