சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், கமல் தலைமையிலான கூட்டணியில் மநீம கட்சி 154 இடங்களிலும, கூட்டணி கட்சியாக சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 இடங்களும், இந்திய ஜனநாயக கட்சிக்கு 40 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி  நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையில், கமல் தலைமையில் 3வது அணி ஒன்றும் உருவாகி உள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்த நிலையில்,  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து களத்தில் இறங்கியுள்ளது.

இதுதொடர்பான பேச்சு வார்த்தையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சி 154  இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில் போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் குமரவேல், சமக சார்பில் சரத்குமாரும், ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டனர்.