கரூர்: ‘கமல் ஒரு அரை வேக்காடு’  என  திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்தார்.

இதில் கரூர் தொகுதியில் திமுக சார்பில்  மீண்டும்  களமிறங்கியுள்ளார் செந்தில் பாலாஜி. இதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அவர், கரூர் பேருந்து நிலையத்தில்  காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது,  தேர்தலில் வெற்றிபெற்று 11 மணிக்கு தளபதி பதவி ஏற்றவுடன் அடுத்த அஞ்சாவது நிமிசத்துல இருந்து மணல திருட ஆரம்பிச்சுடலாம் என்று பேசினார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

செந்தில்பாலாஜி பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அவர் விளக்கம் அளித்து பேசியுள்ளார். அதில், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவது குறித்துநான் சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், மக்கள்நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருகிறார் என காட்டமாக விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் சுமார் 15,000 மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மணல் அள்ள முடியாததால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளத் தடை செய்தால், அதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி ஆற்றுப்படுகைகளிலிருந்து உள்ளூர் கட்டுமானத் தேவைகளுக்கு மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. இந்த அடிப்படைகூட நடிகராக உள்ள கமல்ஹாசனுக்கு தெரியவில்லை.

இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். அது பாதிக்கப்படும் என்பதற்காகவே மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில்தான் இந்த உத்தரவாதத்தை மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அளிக்கும் வகையில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், மாட்டு வண்டியில் மணல் அள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.