சில நாட்களுக்கு முன் ‘நரிவேட்டை’ என்ற படத்தின் இசை வெளியீட்டுவிழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசி ஆச்சரியப்படுத்தினார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.

நரிவேட்டை விழாவில் டிராபிக் ராமசாமி

வழக்கம்போல் அன்றைய பேச்சிலும் சூடு.

“இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன்!  சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும்.

அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர். இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும்போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத்தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன்.. இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

பிறகு அவரை தொடர்புகொண்டு பத்திரிகை டாட் காம் இதழுக்காக பேசினோம்.

“ரஜினி, கமல் அரசியல் அறிவிப்புகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?”

”நாட்டை ரசிகர்கள் ஆண்டு ஆண்டு குட்டிச்சுவராக்குனது போதும். எந்த ஒரு நடிகரும் அரசியலுக்கு வரவேண்டாம். இவங்களுக்கு சமுதாய பிரச்சினைகள் குறித்து ஏதாவது தெரியுமா? காலம் முழுக்க சினிமாவுல நடிச்சி மக்களை சீரழிச்சு சம்பாதிக்க வேண்டியது.. மார்க்கெட் போயிடுச்சுன்னா, மக்களை காக்க வர்றேன்னு அரசியலுக்கு வர வேண்டியது… அதனாலதான் சொல்றேன்.. எந்தவொரு நடிகரும் அரசியலுக்கு வர வேண்டாம்!

“ஏற்கெனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என சினிமாக்காரர்கள் இருவரை முதல்வராக்கிய மாநிலம் அல்லவா தமிழ்நாடு..?”

“அவங்களோட வேற எந்த நடிகர்களையும் ஒப்பிட முடியாது. கமல், ரஜினியையும்கூட!

எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்த காலம் வேறு. அவரோட பெயரை வைத்து ஜெயலலிதாவும் ஆண்டுவிட்டார். அவ்வளவுதான். அதுபோல நட்சத்திரங்கள் ஆட்சிக்கு வரும் காலம் மலையேறிவிட்டது.

கமல், ரஜினி மட்டுமின்றி நடிகர் விஜய்யும் அரசியல் ஆர்வத்துடன் இருப்பதாக சொல்லப்படுகிறதே..

இது போன்ற சூழலே கேவலம்தான். இதில ரஜினி, கமல் என்ன.. விஜய் என்ன.. எல்லோரும் ஒன்னுதான்.

நடிகர்கள் மேல ஏன் இவ்வளவு கோபம்?

இவங்க சினிமவுல நடிச்சா பரவாயில்ல.. நிஜத்திலயும் நடிக்கிறாங்க! இவங்க கொள்கையே சம்பாதிக்கிறது மட்டும்தான். சமூக ஆர்வமே கிடையாது.

இவங்கள்ல யாராவது  வாங்கிற பணத்துக்கு  ஒழுங்கா கணக்கு காட்டினாங்களா? எம்.ஜி.ஆரும் இப்படித்தான். ஆனா அந்த பணத்துல 90 சதவிகிதம் மக்களுக்கு கொடுத்தாரு. இவங்க யாரும் அப்படி இல்லையே!

 சரி.. நீங்க விரும்பறீங்களோ.. இல்லையோ.. அரசியலுக்கு வர்றதா கமல் அறிவிச்சிட்டாரு. ஏற்கெனவே தேர்தல்ல நின்றவர்ங்கிற முறையில அவருக்கு உங்க அட்வைஸ் என்ன..?

ம்… சும்மா ட்விட்டர்ல ஏதாவது எழுதறது.. ரெண்டு மூணு டிவியில பேட்டி கொடுக்கிறது.. இப்படி ஏ.சி. ரூமுக்குள்ள இருந்துகிட்டு செயல்படறதால எந்த பலனும் இல்லே.  நேரடியா மக்களோட இணைஞ்சி, அவங்க பிரச்சினைக்கு போராடணும். அப்பத்தான் மக்களோட பிரச்சினைகள், நாட்டு நிலைமை புரியும்.

தனி கட்சி துவங்கி பிரயோசனம் இல்லை. மக்கள் ஆதரவு கிடைக்காது. ஏன் சொல்றேன்னா… மக்களுக்காக தொடர்ந்து போராடற எனக்கே ஓட்டு கிடைக்கமாட்டேங்குது. கமல், ரஜினிக்கு கிடைச்சுருமா?

அதனால தனிக் கட்சி துவங்காம, ஏதாவது கட்சியில சேர்ந்தாத்தான் எதிர்காலம். இதை கமல், ரஜினி.. ரெண்டு பேருக்குமே சொல்றேன்.

ஏன்னா.. இவங்க ரெண்டு பேருக்குமே தமிழகத்துல  வலுவான கட்டமைப்பு கிடையாது. அப்படி இருக்கிற  ஒரு கட்சியல சேர்ந்தா இவங்க தங்களை பலப்படுத்திக்கலாம். ஆனா மறுபடி சொல்றேன்… அப்பவும்கூட இவங்களால பெருசா அசியல்ல ஜொலிக்க முடியாது.

சரி.. கமல் – ரஜினி.. இரண்டு பேரில் ஒப்பீட்டளவில் அரசியல்ல யாருக்கு வாய்ப்பு இருக்கு?

பொதுவா இரண்டு பேருக்குமே பெருசா எதிர்காலம் கிடையாது. ஒப்பீட்டளவில் பார்த்தால், ரஜினியை விட கமலுக்கு வாய்ப்பு இருக்கு. கமல், சொன்னதை செய்வார்னு பலபேர் நம்புறாங்க.

தற்போதைய ஆட்சி குறித்து என்ன நினைக்கிறீங்க?

இப்போ ஆட்சியா நடக்குது..? பேரங்கள், கமிசன்தான் நடந்துகிட்டு இருக்கு. மத்தபடி ஏதும் உருப்படியா நடக்கவே இல்லை. இந்த ஆட்சியைக் கலைக்கணும்.