டார்ச் சின்னம் கோரி உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் மனு

Must read

சென்னை:
பேட்டரி டார்ச் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு 2021 தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு அச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. இதனால், கமல்ஹாசன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில், தமிழகத்திலும் பேட்டரி – டார்ச் சின்னம் கிடைப்பதற்காக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் மேல்முறையீடு செய்வது என முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.

அதன்படி, தமிழகத்தில் பேட்டரி – டார்ச் சின்னம் ஒதுக்கப்படாதது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவதற்காக, சந்தோஷ் பாபு மற்றும் வழக்கறிஞர்கள் குழு டெல்லி சென்றது. தேர்தல் ஆணையத்திடம் அந்தக் குழு முறையீடு செய்தது. இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், “பேட்டரி டார்ஜ் சின்னத்தை மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கியும், எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி, பேட்டரி டார்ச் சின்னம் உள்ளிட்டவற்றை உபயோகிப்பதை தடுத்தும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ‘பிரஷர் குக்கர்’ சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு ’கரும்பு விவசாயி’ சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article