“ராகுல் காந்தியுடன் தோளோடு தோள் நிற்கிறேன்” பிரச்சனைகளை சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் அவருக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கமலஹாசன் பதிவிட்டுள்ளார்.

2019 ம் ஆண்டு பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, மோடி என்ற குடும்பப்பெயர் கொண்ட நபர்கள் செய்த மோசடி குறித்து பேசினார்.

மோடி குடும்பப்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக ராகுல் காந்தி மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது தான் பேசியதற்காக மன்னிப்புக் கேட்கப்போவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கில் சூரத் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

மோடி குறித்து அவதூறாக பேசியதற்காக ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீனும் வழங்கியது.

மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் அளித்து தீர்ப்பு வழங்கியது.

ராகுல் காந்திக்கு எதிரான இந்த தீர்ப்பை அடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவிர தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கமலஹாசன் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “ராகுல்ஜி, இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன்! நீங்கள் அதிக சோதனை நேரங்களையும் நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள்.

நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான உங்கள் மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்! சத்யமேவ ஜெயதே!” என்று பதிவிட்டுள்ளார்.