வாஷிங்டன் :  அதானி குழுமம்தொடர்பான  முறைகேட்டை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அமெரிக்க நிறுவனமான  ஹிண்டன்பெர்க் நிறுவனம் விரைவில் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில்  அம்பலப்படுத்துவோம் என தெரிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் கவுதம் அதானி போலி நிறுவனங்கள் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் கூறியது. அதானி நிறுவனம் கரீபிய நாடுகள், மொரிஷியஸ் , ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் போலி நிறுவனங்களை நடத்துவதாக கூறிய ஹிண்டன்பெர்க் நிறுவனம், இந்த போலி நிறுவனங்கள் வாயிலாக வரவு, செலவு கணக்குகளில் மோசடி செய்ததோடு வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது.

பங்குச் சந்தையில் துணிகர முறைகேட்டில் ஈடுபட்டதன் மூலம் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்த்தப்பட்டதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் குற்றம் சாட்டி இருந்தது.

இதன் காரணமாக அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்ததுடன் உலக பணக்காரர்கள் பட்டியலிலும் கவுதம் அதானிக்கு கடும் சரிவு ஏற்பட்டது. இந்தியாவில் அரசியல் புயலை எழுப்பி உள்ளது.  இந்த விவகாரத்தால் நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்தப் போவதாக ஹிண்டன்பெர்க் நிறுவனம் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் யாரை பற்றிய விவகாரம், எப்போது வெளியாகும் போன்ற விவரங்களை அந்நிறுவனம் வெளியிடவில்லை.

இதற்கிடையில், பொருளாதார நெருக்கடி மற்றும் முறைகேடு காரணமாக, அமெரிக்காவின் பிரபல வங்கிகள் மூடப்பட்டு வருகின்றன. அதுகுறித்து ஹிண்டன்பெர்க் நிறுவனம் கருத்து தெரிவிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவை சீர்குலைக்க திட்டமிட்டு அந்நிறுவனம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகின்றன.

அமெரிக்காவின் 16ஆவது மிகப்பெரிய வங்கியான கலிபோர்னியாவைச் சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கிக்கு (Silicon Valley Bank) ஏற்பட்ட நிதி நெருக்கடியை தொடர்ந்து வெறும் 48 மணி நேரத்தில் திவாலானதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கடந்த மார்ச் 10ஆம் தேதி சிலிக்கான் வேலி வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு வங்கியான ‘சிக்னேச்சர்’ வங்கி (signature bank) மூடப்பட்டது. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் (first republic bank) மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு வாரத்தில் இப்படி பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் 3 வங்கிகள் திவாலாகி இருக்கும் நிலையில், உலகளவில் மதிப்புமிகுந்த வங்கியாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிரெடிட் சூயிஸ் (credit suisse) வங்கியின் பங்கு மதிப்பும் மீண்டும் சரியத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.