டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக புதிய அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

கரசேவகர்கள் ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்டதைத் தொடர்ந்து,  குஜராத்தின் வதோதரா நகரில் வன்முறை பரவியது. அப்போது,  2002-ம் ஆண்டு மார்ச்சில் தனது குடும்பத்தினருடன் ஊரை காலி செய்து சென்ற பில்கிஸ் பானு  என்ற கர்ப்பிணி, சிலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரின் மகள் உட்பட குடும்பத்தினரை தாக்கி, கொடூர முறையில் படுகொலை செய்தது. இந்த  விவகாரம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தண்டனை காலத்திற்கு முன்பே விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி அவர்களை குஜராத் அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து, பில்கிஸ் பானு கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். அவரின் மனுக்கள் மீது, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பெலா திரிவேதி தாமாகவே முன் வந்து வழக்கு விசாரணையில் இருந்து விலகினார். அவர் விலகியதற்கான காரணம் எதனையும் சுப்ரீம் கோர்ட்டு அமர்வு குறிப்பிடவில்லை.

இதனால், வழக்கு பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணைக்கு புதிய அமா்வு அமைக்கப்படும். அதன் பிறகே, இந்த மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற  நீதிபதி அறிவித்திருந்தார். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, விரைவில் புதிய அமர்வு ஏற்படுத்தி பில்கிஸ்பானோ வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.