சென்னை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவை நடிகரும், மநீம கட்சி தலைவரமான கமல்ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். அப்போது, வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தி புகார் மனு அளித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற உள்ளது. இதனால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில், சிசிடிவி கண்காணிப்புடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், சில வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தம் இல்லாத ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக திமுக தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று காலை திடீரென தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து பேசினார்.
அப்போது, வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் அவர் பேசியதாகவும், வாக்கு இயந்திரங்கள் உள்ள அறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.