சென்னை: கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்தது. தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மநீம கட்சியை தொடங்கியதாக கூறிக்கொண்டு வந்த கமல்ஹாசன், பின்னர் திடீரென காணாமல் போனார். படத்தில் நடித்து பணம் சம்பாதித்தவர், தேர்தல் நேரத்தில் மீண்டும் களத்துக்கு வந்தார். ஆனால், மற்ற அரசியல்வாதிகளைப் போல, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளாமல், ஹெலிகாப்டர் மூலம் பல இடங்களுக்கு சொகுசாக சென்று வாக்கு சேகரித்தார். கமலின் ஆடம்பரம் மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியது.
மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்களை வலியுறுத்தியவர், தான் மாறாமல், மேதாவித்தனமான அரசியலை முன்னெடுத்து வந்தார். இதனால், மற்ற அரசியல் கட்சிகளும் அவரை கூட்டணியில் சேர்க்க முன்வர வில்லை. அவரது கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் ஒதுங்கத் தொடங்கினர். மேலும் எதிர்பார்த்த அளவுக்கு மக்களிடையே ஆதரவும் இல்லை. இதனால், வேறு வழியின்றி சரத்குமார் கட்சியுடனும், பாரிவேந்தர் கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட்ட நிலையில் பெரும் தோல்வியை சந்தித்தார். தமிழக அரசியல் களத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
இதனால் கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து கூறிய கட்சியின் துணைத்தலைவர் பொன்ராஜ், மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது; அதனால் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி அனைத்து நிர்வாகிகளும் பதவி விலகுகிறோம் என தெரிவித்துள்ளார்.
மநீம பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு. சி.கே.குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.