சென்னை,

ரசியல் கட்சி தொடங்குவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ள கமல், அதற்கான முன்னோட்டமாக தனது பிறந்த நாளன்று  மொபைல் அப்ளிகேஷன்களை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கமல்  இன்று கொல்கத்தா புறப்பட்டு சென்றார். அங்கு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் கமல், அதையடுத்து  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேச உள்ளார்.

இதற்காக இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்த கமல்,   விமானம் மூலம் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதியும் வயது முதிர்வு காரணமாக செயல்படாத நிலையில் இருக்கும் நிலையில், திரையுலகை சேர்ந்த பலர் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் சிஸ்டமே சரியில்லை என்று கூறி அரசியலுக்கு அடித்தளமிட்டார். அது போல நடிகர் கமலஹாசனும், அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் என்றும், தான் புதிய அரசியல் கட்சி தொடங்குவேன் என்றும் அறிவித்தார்.

தொடக்கத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் கிளின் இந்தியா போன்றவை குறித்து வரவேற்று கருத்து தெரிவித்த கமல், தற்போது அதற்காக மக்கள் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும், தான் அரசியலுக்கு வர அடித்தளம் அமைத்து வருவதாகவும், அடுத்த ஆண்டுமுதல் தொடர் அறிவிப்புகள் வெளியாகும் என்றும், அதன் முன்னோட்டமாக  மக்கள் தன்னுடன் தொடர்பு கொள்ள 3 ஹேஸ்டேக்ககளையும் தனது பிறந்த நாளன்று வெளியிட்டார்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அரசியல் ஆலோசனை பெற்ற கமலஹாசன், பின்னர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இன்று மாலை கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள நடிகர் கமல் கல்கத்தா புறப்பட்டு சென்றார்.

கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழா இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான திரையுலக பிரபலங்கள்  கலந்து கொள்கின்றனர். இந்த  விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.  அதையேற்று அவர் கொல்கத்தா சென்றுள்ளார்.

அங்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து, அரசியல் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு எதிரான கருத்துடைய மாநில முதல்வர்களை நடிகர் கமலஹாசன் சந்தித்து பேசி வருவது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.