சென்னை:

பேனர் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

சமீபத்தில் அதிமுகவினர் வைத்த பேனர் காற்றில் விழுந்து, பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ  என்ற இளம் பெண் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியில் சிக்கி பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,  அரசியல் கட்சிகள், தங்களுடைய அரசியல் பொதுக்கூட்டங்கள், கட்சிக்காரர்களின் விழாக்களில் பேனர்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தியது.

திமுக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.  அரசியல் கட்சிகளும் தலைவர்களும் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக பேசினார்கள். இதனிடையே, சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழகம் வருவதையொட்டி தமிழக அரசு அவரை வரவேற்கும் விதமாக சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில்  பேனர்வைக்க அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி  வரும் நிலையில்,  மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை பிரதமர் மோடி ஒரு முன்னோடியாகச் செய்தால் தமிழர்களின் உணர்வுகள் மீதான அக்கறையை பிரதிபலிக்கும் என்று  பிரதமருக்கு டிவிட்டரில்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மரியாதைக்குரிய பிரதமர் @PMOIndia
சுபஸ்ரீயின் மரணத்தை சமாளிக்க தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் போராடி வரும் நிலையில், உங்கள் பதாகைகளை அமைப்பதற்கான அனுமதியைப் பெற தமிழ்நாடு அரசு நீதிமன்றங்களை அணுகியுள்ளது.

இந்த இடையூறு பேனர் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதல் படியை நீங்கள் ஒரு முன்னோடியாகச் செய்தால், அது தமிழர்களின் உணர்வுகள் மீதான உங்கள் அக்கறையை பிரதிபலிக்கும். மேலும், அதுவே உங்களுக்கு மிகப் பெரிய விளம்பரத்தைப் பெற்றுதரும். ஜெய் ஹிந்த்!”

இவ்வாறு டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.