சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ஆசிரியர் உள்பட 5 நிர்வாகிகளுக்கு சென்னை  உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 3 நிர்வாகிகள், ஆசிரியைகள் 2 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மாணவியின் மரணம் தற்கொலைதான் என்று கூறிய நீதிமன்றம், அவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகவில்லை என்று கூறியிருந்தது.

இதையடுத்து, கனியாமூர் தனியார் பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய  5 பேருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின்  விதிக்கப்பட்டது. அதாவது, கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர் மற்றும் முதல்வர் மதுரையில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் என்றும் இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருந்து கையெழுத்திட வேண்டும் எனவும் ஜாமீன் தந்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்திருந்தது.

இதையடுத்து கனியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறையில் இருந்து வெளிவந்தனர். சேலம் சிறையிலிருந்து தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி, 2 ஆசிரியைகள் விடுதலை செய்யப்பட்டனர்.