கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக,  2வது நாளாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.  திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது தலைமையில்  விசாரணை  நடைபெற்று வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது தொடர்பாக ஏற்பட்ட வன்முறை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் 3 நாட்களாக போராட்டம் நடத்தியபோது, காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காததால், 4வது நாள் வன்முறை தலைவிரித்தாடியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று விசாரணை தொடங்கினர். இன்று 2வது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் இடம் மற்றும் அந்த பகுதியில் சுவற்றில் உள்ள ரத்தக்கரை, வகுப்பறை சேதப்படுத்தப்பட்டது உள்பட பல்வேறு  நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதுபோல,  மாணவி மரணம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி முதல்வர் உள்ளிட்டோரிடம் விவரங்களை கேட்டு பெற்றனர். அதன் தொடர்ச்சியாக சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு சென்றும் அவர்கள் ஆய்வை நடத்தவுள்ளனர். இதனிடையே மாணவி மரணம் அடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கலவரத்தில் ஈடுபட்ட 302 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். வாட்ஸ் அப் குழுவில் இருந்து பெறப்பட்ட 600 எண்களை வைத்து அவர்களில் யார் யார் கலவரம் நடந்த இடத்தில் இருந்தனர் என அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.