சென்னை: தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் என முதல்வர் மு.கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், அந்த விருதுக்குரிய நபரை தேர்ந்தெடுக்க எஸ்பி.முத்துராமன் தலைமையில் தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ் திரையுலகில் சிறந்துவிளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் ‘கலைஞர் கலைத் துறை வித்தகர் விருது’ வழங்கப்படும் என்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூன் 3-ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதாளரை தேர்வு செய்ய திரைப்பட இயக்குநர் எஸ்பி.முத்துராமனை தலைவராகவும், நடிகர்சங்கத் தலைவர் நாசர், இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டதேர்வுக் குழுவை அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
இக்குழு பரிந்துரைக்கும் விருதாளருக்கு விருது தொகை ரூ.10 லட்சம், நினைவுப் பரிசு ஆகியவற்றை கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.