இடதுசாரி இயக்க செயல்பாட்டாளரான திவ்யபாரதி  சமீபத்தில் “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டார். இது  பரவலான கவனத்தை ஈர்த்தது.

மலம் அள்ளும் தொழிலாளர்களின் அவலங்களை முகத்தல் அறைந்தாற்போல் சொல்லிய படம் இது.

திவ்ய பாரதி முகநூல் பதிவு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆவணப்படத்தை திரையிட போலீசார் தடை விதித்தனர். இந்த  நிலையில், YouTube-இல் இப்படம் பதிவேற்றப்பட்டு மக்களை ஈர்த்தது.

இந்நிலையில், காவல்துறை திவ்ய பாரதியை கைது செய்தது.

கடந்த 2009ம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போது தலித் மாணவர் சுரேஷ் பாம்பு கடித்து உயிரிழந்தார். இதையடுத்து தலித் மாணவர்கள் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், சுரேஷ் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுரேஷ் உடலை வாங்க மறுத்து திவ்யபாரதி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

வழக்கு பதிவு செய்து 8 ஆண்டுகள் கடந்த பின்பு இன்று மதுரை ஆனையூர் காவல் துறையினர் திவ்ய பாரதி கைது  செய்தனர். பிறகு மதுரை நீதிமன்றத்தில்  திவ்யபாரதி ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கு விசாரணைக்கு நீண்ட நாட்களாக ஆஜராகாத நிலையில் திவ்யபாரதி  கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விரைவில் விடுவிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கதிராமங்கலம் போராட்டத்தை ஆதரித்து நோட்டீஸ் அளித்தார் என்று சேலம் பல்கலை மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும், இதே போராட்டத்துக்கு ஆதரவு தெரவித்து முகநூலில் பதிவிட்டார் என்று மாணவர் குபேந்திரன் கைது செய்யப்பட்டிருப்பதும் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசு, திவ்யபாரதியை கைது செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.