காக்கா குளம்  பிள்ளையார் எனும் சாபம் தீர்த்த  விநாயகர் திருக்கோயில் …!

தலங்கள் தோறும் பல காரணப் பெயர்களை பெற்ற முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் சிவ ராஜதானி எனப்போற்றப்படும் நாகப்பட்டினம் நகரின் மையத்தில் தனிக்கோயிலாக சாபம் தீர்த்த விநாயகர் எனும் காக்கா குளம் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.  ஆதி காயாரோகணம் எனும் சட்டநாத சுவாமி திருக்கோயிலின் உப கோயிலாக அதன்  எதிரே நீலா மேல  வீதியில் (LIC அருகே) இக்கோயில் அமைந்துள்ளது.

மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன், கருங்கல் திருப்பணிகளால் ஆன  இக்கோயில் 2015 ஆம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று நித்திய வழிபாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

தல வரலாறு

இந்திரன், அகல்யயை அடைய எண்ணி கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற அக்கதையின் படி கௌதம முனிவரின் மனைவியான அகலிகையை இந்திரன் அடைய எண்ணம் கொண்டு, முனிவரின் குடிலின் அருகே காக்கை உருவெடுத்து கரைந்தான்.   கௌதம முனிவரும் பொழுது விடிந்ததாக எண்ணி வெளியே சென்றுவிட இந்திரன் கௌதம முனிவரின் வடிவம்  எடுத்து அகலிகையை நாடினான்.

நடப்பவையெல்லாம் பின் தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்த கௌதம முனிவர் அகலிகை, இந்திரன் ஆகியோரை சபித்து விடுகிறார்.  பின் இந்திரன் தேவகுரு பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி சாப விமோசனம் பெற காக்கை உருவிலேயே  நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமி, நீலாயதாட்சி அம்மன் கோயிலின் தென்மேற்கு பகுதியில் ஒரு தீர்த்தம் அமைத்து விநாயகப் பெருமானை முதலில் வழிபட்டான்.

இந்திரனின் சாபம் தீர்க்க வழி செய்ததால் சாபம் தீர்த்த விநாயகர் என்றும். இந்திரன் காக வடிவத்தில் அமைத்த குளத்தின் அருகே உள்ளதால் காக்கா குளம் பிள்ளையார் என்றும் தற்போது அதுவே மருவி காக்கா பிள்ளையார் என அழைக்கப்படுகிறார்.

தல சிறப்புகள்

திருநள்ளாற்றில் சனி தோஷம் முழுமையாக நீங்கப் பெறாத நள மகாராஜா பின் இக்கோயில் காக்கா குளத்தில் நீராடி விநாயகரை வழிபட்டு சனியினால் காலில் ஏற்பட்ட தோஷம் நீங்கப் பெற்றதாக ஐதீகம்.  இத்தகைய சிறப்பு வாய்ந்த குளம் தற்போது கால ஓட்டத்தில் மறைக்கப்பட்டு காணாமல் போயிற்று என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.

சூரிய பகவானும் இந்த விநாயகரை வழிபட்டு புத்திர சந்தானம் குழந்தை பாக்கியத்தை பெற்றதால் மார்ச் மாத இறுதி வாரங்களில் அஸ்தமனத்தின் போது சூரிய கதிர்கள் விநாயகரின் மீது படும்படி சூரிய பூஜை நடைபெறுகிறது.

மேலும் இந்திரனும், சூரிய பகவானும் அஞ்சலி முத்திரையில் கை கூப்பி விநாயகரை தொழுத வண்ணம் அமைந்திருப்பது வேறெந்த திருக்கோயில்களில் காணமுடியாத அமைப்பாகும்.

திருவிழாக்கள்

மாதாந்திர வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தியில் சிறப்பு வழிபாடுகளும். ஆவணி மாத மஹா விநாயகர் சதுர்த்தியில் உற்சவமும் நடைபெற்று வருகிறது.    மேலும் இக்கோயிலின் தனிச் சிறப்பான சூரிய பூஜை மார்ச் மாதம் 26ஆம் தேதி துவங்கி ஒரு வாரம் நடைபெறுகிறது.

வழித்தடம்

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம், அருகிலுள்ள பழைய பேருந்து நிறுத்தம் ஆகியவற்றிலிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் எல்ஐசி (LIC) ஸ்டாப்பிங் அருகே இறங்கி இக்கோயிலை வந்தடையலாம்.