விழுப்புரம்:
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணத்தை தொடர்ந்து வட மாவட்டங்களில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
நுரையீரல் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த காடுவெட்டி குரு, கடந்த சில வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் காலமானார்.
அவரது உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பதப்படுத்தப்பட்ட பின் சொந்த ஊரான அரியலூர் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் காடுவெட்டி குரு மறைவுக்காக கடைகளை அடைக்கச் சொல்லியும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது அவரது ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினார். இதில் ஏராளமான பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, தா.பழூர், செந்துறை ,விழுப்புரம் போன்ற பகுதிகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதுருபோல புதுச்சேரியிலும், தொழில் நிறுவனங்களை மூடுமாறு பாமகவினர் மிரட்டி வருவதாகவும், திருபுவனை சிப்காட் தொழிற்பேட்டை பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்ற 50க்கும் மேற்பட்ட பாமகவினர், அங்குள்ள தொழில் நிறுவனங்களை மூடுமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு காரணமாக, வெளியூர் செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். விழுப்புரத்தில் மட்டும் 23 பேருந்துகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தொழிற்சாலைக்குத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 5 பேருந்துகளின் மீது தாக்குதல் நடைபெற்றது. 5பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன.
இதுபோன்ற சம்பவங்கள் காரணமாக வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் வடமாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது.