காதல் கவிதைகள் – தொகுப்பு 4

 

பா. தேவிமயில் குமார் கவிதைகள்

 

தேனிலவு

 

கிடைத்த மனைவியை

காதலியாக !

கட்டியக் கணவனைக்

காதலனாக !

வசிக்கும் வீட்டினை

வசந்த மண்டபமாக,

வாழ்ந்திடும்

பொழுதுகளை,

தேனிலவாகத்

தேடத் தொடங்கினால்…

அதுதான் காதல் வாழ்க்கை

 

புதைகுழி

 

பாவம் இந்த

பாழாய்ப் போன

இதயம் !

எத்தனை

ஏமாற்றங்களையும்,

துரோகங்களையும்,

வெறுப்பையும்,

காதலையும்,

மன்னிப்பையும்,

மறத்தலையும்,

தன்னுள் புதைத்து வாழ்கிறதே !

 

ஏதோ செய்கிறது !

 

சென்று வருகிறேன் என

சொல்லிப் போன பின்பு,

புன்னகையும் இல்லை,

கண்ணீரும் இல்லை,

ஆனாலும் ஏதோ

என்னை செய்கிறது

இந்தக் காதலின் பிரிவு !

என்னவென சொல்வது ?

 

தேவதைகள்

 

திருவிழாக்களில்

மட்டுமா

தேவதைகளைத்

தேட முடியும் ?

மடையர்களே !

தெருக்களில்

நடந்து செல்லும்

பெண்கள் எல்லாமே

பெண்களல்ல !

தேவதைகளே ! தேவதைகளே !

 

சகிப்புடன்

 

அடுப்படியிலும்,

அந்தப்புரத்திலும்,

அடைத்து வைத்த சமூகத்தை

காலம் தொட்டு

இன்று வரை,

ஏனோ…..

தீண்டல்களை

மட்டுமேக் காதலென

மனதில் கொண்ட

ஆணாதிக்கத்தை

சகித்தபடிதான்

செல்கிறது பெண்ணினம் !

 

பூக்கள்

 

வசந்த காலமென, உன்

வாசலைத் தேடி

நான் செல்லும்போது

இலையுதிர்க் காலமென

எண்ண வைத்தது,

ஆம்….

உன் கல்லூரி விடுமுறை

 

உரிமைகளின் காலம்

 

நீயும், நானும்

நாடோடிகளாய்

வேட்டைக்குச் சென்றோம் !

வீரமோ !

வேட்கையோ !

விருந்தோ !

வேதனையோ !

சமமாகவே நாம்

சந்தித்தோம்

சாதித்தோம் !

அனேகமாக….

ஆதிகாலமான

அந்தக் காலமே,

பெண், பெரும் உரிமையைப்

பெற்ற காலமாக

இருந்திருக்கலாம் !

அதற்குப்பின் …..?

 

மன்னிக்க முடியாது

 

காதலுக்குள்ளான

நட்பு,

கொடுத்து வைத்தவர்கள் !

நட்புக்குள்ளானக்

காதல்….

கெடுத்துக்கொண்டனர்,

ஒரு சேர

காதலையும், நட்பையும் !

நட்பென்ற பெயரால்

காதல் செய்பவர்களை

மன்னிக்க முடியுமா ?

 

சிப்பி

 

கடற்கரையில்

கால்கள் நனைய

கரைந்திருந்தோம் !

முத்துக்களைத்

தொலைத்த

சிப்பிகள்,

சிறிது நேரம் உன்

சிறு நகங்களையே,

பார்த்தது !

இதுவோ ! தன்

முத்தென்று !

 

இருவர்

 

அந்தப் பேருந்துப்

பயணத்தில்

இருவராக

ஏறி அமர்ந்தோம் !

நிறுத்தத்தில்

நீ இறங்கிய பின்னும்

இருவராகவே

இருப்பதாய் உணர்கிறேன்

 

– பா. தேவிமயில் குமார்