சென்னை,
கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உள்ளது.
ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் படத்துக்கு தடை கோரி சிங்காரவேலன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி படத்துக்கு இடைக்கால தடை விதித்தார்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவர உள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இந்த படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த படம் வருகிற நவம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு தடை கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ‘லிங்கா’ படப்பிரச்சினைக்கு முதன்மை காரணமாக விளங்கிய சிங்காரவேலன்தான் இப்படத்திற்கும் தடை கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவர் திருச்சி – தஞ்சை பகுதிக்கு வெளியிட்டு இருந்தாலும், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும்போது திரையரங்குகளும் சேலத்தை சேர்ந்த 7G பிலிம்ஸ் சிவா மட்டுமே ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வேந்தர் மூவிஸ் சார்பில் கண்டிஷன் போடப்பட்டது.
6.5 கோடி ரூபாய் திரையரங்குகள் மூலம் வசூலித்து தருவதாக ஒப்பந்தம் போட்ட சேலம் 7G சிவா திரை யரங்குகளில் இருந்து 6.5 கோடி வசூலித்து விட்டு 5 கோடி 88 லட்சம் மட்டுமே செலுத்தினர். மீதி 62 லட்சத்தை செலுத்தவில்லை.
சேலம் 7G சிவா தான் கடவுள் இருக்கான் குமாரு படத்தை வெளியிட இருக்கிறார். சேலம் 7G சிவாவிடமிருந்து தனக்கு பணம் வர வேண்டும் என்றும் இந்த படம் வெளியானால் தனக்கு பணம் கிடைக்காமல் போய்விடும் என்று சிங்காரவேலன் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆதாரங்களை பார்த்த நீதிபதி படத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.