‘கபாலி’ பட ரீலீஸை பாலிவுட்டும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்தியாவிலேயே முதன் முதலாக விமானத்திலும் கபாலி விளம்பரம் ஜொலிக்கிறது அல்லவா… அதான் இந்த ஆச்சரிய எதிர்பார்ப்பு.
ஏர் ஆசியா விமான நிறுவனத்துடன் ஆறுமாத ஒப்பந்தம் செய்து இருக்கிறார், தயாரிப்பாளர் தாணு. அதுவரை கபாலி விளம்பரத்தை தாங்கி மேகக் கூட்டத்தின் இடையே விமானம் பயணம் செய்யும்.
படத்தின் கேரள விநியோக உரிமையை மோகன்லாலும், கர்நாடக உரிமையை ‘லிங்கா’ தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷூம் வாங்கி இருக்கிறார்கள்.
திரையில் 2-மணிநேரம், 32-நிமிஷம் ஓடக்கூடிய ‘கபாலி’ மூன்று பீரியட் கொண்ட படம். 30-வயது ரஜினி, 45-வயது ரஜினி, 60-வயது ரஜினி என்று மூன்றுவித கெட்டப்புகளில் தோன்றி துவம்சம் செய்கிறார். மூன்று பீரியட்டிலும் ரஜினியுடன் மோதும் அதகள வில்லனாக வின்ஸ்டன் சாவோ நடிக்கிறார்.
ஹைதராபாத்தில் ‘கபாலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. இயக்குனர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியை ஆந்திராவில் உள்ள ஒரு தெலுங்கு டிவி சேனல் நேரடியாக ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சி முழுவதையும் அமெரிக்காவில் இருந்தபடி ரஜினி டிவியில் பார்த்து ரசித்தாராம்.
‘கபாலி’யை ஜூலை 1-ம்தேதி சென்சார் செய்து, 15-ம்தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்கள். மற்ற மொழி “கபாலி” வேலைகள் முழுதும் முடிந்துவிட்டாலும், மலாய் பதிப்பு டப்பிங் வேலை முடியவில்லை. ஆகவே . இப்போது ஜூலை 7-ம்தேதி சென்சார் முடித்து, 22-ம்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் மலேசியாவில் பல இடங்களில் ஜூலை 29ம் தேதி கபாலி ரிலீஸ் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே அதே தினம் தமிழகத்திலும் ரிலீஸ் செய்யப்படுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.