பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக இன்று காலை தகவல் பரவியது.
ஆனால், இந்த தகவல் உண்மையில்லை என்றும் பாடகர் யேசுதாஸ் அமெரிக்காவில் நலமுடன் இருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் யேசுதாஸ்.
ஒரே நாளில் வெவ்வேறு மொழிகளில் 11 பாடல்களை பாடி ரெக்கார்டிங் செய்துள்ள யேசுதாஸின் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
7 முறை தேசிய விருது பெற்றுள்ள இவருக்கு பத்மஸ்ரீ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
85 வயதான கே.ஜே. யேசுதாஸ் பின்னணி மட்டுமன்றி சாஸ்திரிய சங்கீதமான கர்நாடக இசையிலும் புகழ்பெற்றவர்.
இந்த நிலையில், இன்று காலை யேசுதாஸ் உடல்நிலை குறித்து வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள யேசுதாஸ் தான் நலமுடன் இருப்பதாக தனது உதவியாளர் சேது இயாள் மூலம் தெரிவித்துள்ளார்.