ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கடந்த கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வருகிறார் பேரறிவாளன். கடந்த ஆண்டு, அவரது தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி ஒரு மாதம் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்தார். மீண்டும் சிறைக்கு சென்றவர், மறுபடியும் உடல்நலப் பாதிப்பு காரணமாக பரோல் கேட்டு மனு அளித்தார். அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்த நிலையில், ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், வயதான பெற்றோர்களை காணும் வகையில் அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார், அற்புதம்மாள் சிறைத்துறைக்கு மனு கொடுத்திருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கின் கடந்த விசாரணைகளின்போது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசும், சிறைத்துறையும் தெரிவித்தன. அப்போது அற்புதம்மாள் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், “பேரறிவாளனின் தாய் தந்தை இருவரும் வயதானோர் என்பதாலும், அவர்களை கவனித்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. சிறை விதிகளில் விலக்களித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும். விடுதலை செய்ய முடிவெடுத்த அரசு, பரோல் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்ய முடிவெடுத்ததும், விடுப்பு மறுப்பதும் ஒரே கட்சியின் தலைமையிலான அரசுதான்” என்பதை சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது” என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர். மேலும், பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க ஆலோசனைகள் வழங்க சிறைத்துறையில் சட்ட ஆலோசகரை ஏன் நியமிக்க கூடாது எனவும் நீதிபதிகள், அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் பேரறிவாளன் உடல் நிலையில் எவ்வித குறைபாடும் இல்லாமல், சீரான நிலையில் இருப்பதாக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றினாலும், சிறையில் இருக்கும் வரை சிறை விதிகளை கடைபிடிக்க வேண்டும், என்று அரசு சார்பில் வாதிடப்பட்டது. மேலும், கடந்த முறை பேரறிவாளனுக்கு வழங்கிய பரோல், கடந்த ஜனவரி மாதம் தான் முடிந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் மறுபடியும் பரோல் கேட்க முடியும் என கூறப்பட்டது.
இதையடுத்து, தமிழகத்தில், அமைச்சரவை மாறியிருந்தாலும், முடிவெடுத்த அரசுகள் ஒன்றுதான் என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அதையடுத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவு கிடைத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, 30 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் பேரறிவாளன், விடுப்பில் இருக்கும் காலங்களில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளுக்காக சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.