தமிழக அரசியலில், இன்றைய சூழலில், மிக முக்கியமான எதிரிக் கட்சிகள் எவையென்றால், அது விடுதலை சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான்.

இந்த 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, 23 இடங்களில், மாம்பழம் சின்னத்தில் நின்றது. அதேசமயம், திமுக கூட்டணியில், 6 இடங்களில் போட்டியிட்ட விசிக, பானை சின்னத்தில் நின்றது.

தேர்தல் முடிவுகளின்படி, பாமக, தருமபுரி, பெண்ணாகரம், சேலம் மேற்கு உள்ளிட்ட 5 தொகுதிகளில் வென்றுள்ளது. அதேசமயம், விடுதலை சிறுத்தைகள் செய்யூர், நாகப்பட்டினம், காட்டுமன்னார்கோயில், திருப்போரூர் என்ற 4 இடங்களில் வென்றுள்ளது.

பாமக, தனது தேர்தல் வரலாற்றில் அதிகபட்சமாக 2001 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் வரை வென்று, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. விசிகவைப் பொறுத்தவரை, கடந்த 2006ம் ஆண்டில், அதிமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு, சட்டமன்றத்தில் 2 இடங்களை வென்றதுதான் அதிகபட்ச வெற்றியாக இருந்தது.

ஆனால், தற்போதைய தேர்தலில், 6 இடங்களில் மட்டுமே போட்டியிட்டிருந்தாலும், 23 இடங்களில் போட்டியிட்ட பாமகவுடன், சட்டசபையில், கிட்டத்தட்ட சரிக்குசமமாக அமரும் வகையில் வென்றுள்ளது விசிக.

மேலும், நாடாளுமன்ற மக்களவையிலும், பாமகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில், விசிகவுக்கு பிரதிநிதித்துவம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.