டில்லி:

நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ந்தேதி தொடங்கும் நிலையில், ஜூன் 20-ம் தேதி நாடாளு மன்ற இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில்  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

17வது மக்களவைக்கான தேர்தல் முடிவடைந்து பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக அரசு பதவி ஏற்றுள்ளது. பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜுன் 17 முதல் ஜுலை 26 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் தொடங்கியதும், முதலில் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். அதையடுத்து, ஜுன் 19-ம் தேதி சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது.

இதைத்தொடர்ந்து, ஜூன் 20ந்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

அதைத்தொடர்ந்து ஜுலை 5-ம் தேதி முழுமையான  மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.