டெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் உச்சம் அடைந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கால், அதிமுக பொதுக்குழுவில், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து புதிதாக வேறு தீர்மானம் நிறைவேற்றவோ, கட்சி விதிகளில் திருத்தம் செய்யவோ கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த 23-ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் அந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜூலை 11ந்தேதி பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர், சார்பில் வழக்கறிஞர் கவுதம் சிவசங்கர் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவில்,  ‘‘அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது.  பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள அறிக்கையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளதாகவும், இன்றுவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தாம்தான் என்றும், அதில் மாற்றம் இல்லை என்றும், கூறியுள்ளார். தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகளின் கடந்த பொதுக்குழு நடந்ததா இல்லையா மற்றும் கடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன் குறிப்பிட்டுள்ளார்.