ஜூலை 11ந்தேதி பொதுக்குழு செல்லாது: அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

Must read

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம்  பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.  ஜூன் 23ந்தேதி நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  அதனால் ஜூலை 11ந்தேதி எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்பது உறுதியாகி உள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கின் விசாரணை இரு நாட்களாக நடந்து வந்த வாதம் நிறைவு பெற்றதை தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது. இந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்பட்டது. பின்னர் 11.30மணிக்கு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம்  பொதுக்குழு தொடர்பான வழக்கை மீண்டும் விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தை  அறிவுறுத்தியது. இதன்படி வழக்கு விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. இநத் வழக்கின் விசாரணை 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 11-ந்தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இருதரப்பு வக்கீல்களும் காரசாரமாக தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்தனர். இதனை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி இன்று காலை 11.30 மணி அளவில் நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு, ஜூன் 23ந்தேதி நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.  அதனால் ஜூலை 11ந்தேதி எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளதுடன், தேவைப்படின் நடுநிலையாளர் வைத்து கூட்டலாம் என்றும் தெரிவித்து உள்ளது. மீண்டும் அதிமுக பொதுக்குழுவை கூட்டலாம் என்றும் அறிவித்து உள்ளது.

இந்த தீர்ப்பு ஓபிஎஸ் ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு காரணமாக எடப்பாடி பழனிச்சாமியின்  அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் பதவி பறிபோயுள்ளது.

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, ஈபிஎஸ் அணி மேல் முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது

More articles

Latest article