ஜபல்பூர்
ஜபல்பூர் நீதிமன்றம் முன்பு தன்னை அடிக்கடி இட மாற்றம் செய்வதைக் கண்டித்து நீதிபதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.
உச்சநீதி மன்ற விதிகளின்படி நீதிபதிகள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் நீதிபதி ஸ்ரீவாஸ் கடந்த 15 மாதங்களுக்குள் நான்கு முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதை எதிர்த்து இன்று ஜபல்பூரில் உள்ள உயர்நீதி மன்ற வாயிலில் அமர்ந்து போராட்டட்த்தில் ஈடுபட்டுள்ளார்.
இது பற்றி நீதிபதி தெரிவித்ததாவது :
“உச்ச நீதி மன்ற விதிமுறைகளின் படி நீதிபதிகள் மூன்று வருடங்களுக்கு ஒரு முறைதான் இடமாற்றம் செய்யப்பட முடியும். ஆனால் நான் கடந்த 15 மாதங்களுக்குள் நான்கு முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இது குறித்து நான் பலமுறை கடிதங்கள் எழுதியும் ஒன்றும் பயனில்லை. அதனால் நான் இந்த சத்யாக்கிரக முறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
இதனால் எனது குழந்தைகள் ஒவ்வொரு வேறு வேறு நகரங்களில் தங்கி கல்வி பயில்கிறார்கள். முதலில் தார் என்னும் இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன், பின்பு அங்கிருந்து சிஹோரா, பின் அங்கிருந்து ஜபல்பூர் என அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்.
தற்போது ஜபல்பூர் உயர்நீதி மன்றத்தில் ஸ்பெஷல் டூட்டி ஆஃபிசராக பணியாற்றும் என்னை நீமுக் என்ற இடத்துக்கு மீண்டும் இடமாற்றம் செய்துள்ளனர். இது பற்றியும் நான் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்துக்கு பல கடிதங்கள் எழுதியும் பதில் இல்லை.
இதனால் எனது வேலை பறி போனாலும், நான் கைது செய்யப்பட்டாலும் அதற்காக நான் கவலைப்படவில்லை. இந்த போராட்டத்தை நான் தொடரப்போகிறேன்” என கூறி உள்ளார்.
மற்றவருக்கு நேரிடும் துன்பத்தை நீதிபதியிடம் கூறி நீதி கேட்டு முறை இடுவார்கள். ஆனால் நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லை எனில் போராடத்தான் வேண்டியுள்ளது.