சென்னை,

முன்னாள் கொல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணனை, தீவிரவாதி போல பின்தொடர்ந்து சென்று கைது செய்வதா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

உச்சநீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை விதித்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் நேற்று இரவு கோவையில் கைது செய்து, சென்னை கொண்டு வரப்பட்டு, இன்று முற்பகல் விமானம் மூலம் கொல்கத்தா அழைத்து சென்றனர்.

‘இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

முன்னாள் நீதிபதி கர்ணனை தீவிரவாதி போன்று பின் தொடர்ந்து கைது செய்துள்ளனர்.  இது அரசியல் அமைப்பு சட்டத்தையே கேலிக் கூத்தாக்கும் செயல் எனவும்,  சக நீதிபதிகள் மீது புகார் தெரிவிப்பது நீதிமன்ற அவமதிப்பாகாது என்றும் திருமாவளவன் கூறினார்.

மேலும், கர்ணன் செய்த குற்றம் என்ன? அவர்மீது  குற்றப்பத்திரிகை அவர் மீது தாக்கல் செய்யப்பட்டதா? நீதிபதிகளை விசாரிக்கக் கூடிய சட்டத்தின் படி அது விசாரிக்கப்பட்டதா? இந்த கேள்விகள் எதற்கும் விடை இல்லை.

அவர் விசாரிக்கப்படாமலேயே அவர் தரப்பு நியாயங்களை கேட்காமலேயே அவருக்கு 6 மாதம் தண்டனை விதித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளே சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுகிறது.

யாருக்கு அதிகாரம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கர்ணனுக்கு எதிராக தீர்ப்பளித்த போது, கர்ணன் உச்ச மன்ற நீதிபதிக்கு எதிராக தீர்ப்பளித்தார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு சொல்கிற அதிகாரம் இருக்கிறதா? அதே போன்று உயர்நீதிமன்ற நீதிபதி, உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கட்டுப்பட்டவரா? உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திற்கு கீழ் இயங்க வேண்டுமா?

உச்சநீதிமன்றம் வெறும் மேல் முறையீட்டிற்கான அமைப்பா என்ற கேள்விகள் எல்லாம் எழும் போது, அரசியல் அமைப்பு சட்டமே கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நீதிபதி கர்ணன் 6 மாதம் சிறைக்குள் இருக்கப் போகிறார் என்பது பிரச்சனை இல்லை. உச்சநீதி மன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கான சட்டப் பூர்வமான உறவு என்ன?

நிர்வாகம் ரீதியான உறவுகள் என்ன என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டிய அவசியம் உள்ளது.

கர்ணனின் மனு உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி குடியரசு தலைவருக்கு மனு செய்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்திற்கும் மனு அனுப்பியுள்ளார். சாதாரண குடிமகனின் நிலை என்ன? இந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. கர்ணன் புகார் அளித்தும் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை என்று சொன்னால் சாதாரண குடிமகன் கொடுக்கும் புகார்களுக்கு என்ன நடவடிக்கை என்ற கேள்வி எழுகிறது.

கர்ணன் கொடுத்த மனுக்களை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அல்லது அவர் குற்றம்சாட்டிய 21 பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மவுனம் காத்திருப்பதன் பின்னணி என்ன?

கேலிக் கூத்தான அரசியல் அமைப்புச் சட்டம் இப்படி மாறி மாறி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குற்றம்சாட்டிக் கொண்டு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தபோது. மத்திய அரசு இதில் தலையிடாமல் மவுனம் காத்தது ஏன்?

இது அரசியல் அமைப்பு சட்டத்தை கேலிக் கூத்தாக்கும் செயல் அல்லவா?

இவ்வாறு அவர் கூறினார்.