ன்று காந்தியடிகள் பிறந்தநாள். அவரைப் பற்றி நிறைய படித்திருப்போம். பத்திரிகையாளரின் பொறுப்பு பற்றியும், பொது நோக்கத்தில் நடத்தப்படும் நிறுவனத்தின் பணியாளர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வெளிப்படுத்திய சுவாரஸ்யமான இந்த சம்பவத்தைப் படித்துப்பாருங்கள்.
”யங் இந்தியா” பத்திரிகையை காந்தியடிகள் ஏற்றுக்கொள்வதற்கு முன் ஒரு நாள் அதன் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். அதன் அப்போதைய ஆசிரியர் ஆர்.கே. பிரபுவும் அருகே இருந்தார். அடிகள், ”இதற்குச் செய்திகள் எங்கிருந்து சேகரிக்கின்றீர்கள்?” என்று கேட்டார்.
பிரபு,  ”யங் இந்தியா, பாம்பேகிரானிக்கிள் இவற்றிற்கு மாற்றாகப் பல பத்திரிகைகளை வருகின்றன. அவற்றிலிருந்து கத்தரித்து எடுக்கிறேன்” என்றார்.
காந்திஜி, “ இந்த வேலையில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு பிரபு, “இந்தப் பத்திரிகைக்கு வேண்டிய செய்திகள் தயாரிக்க அரைமணியைவிட அதிகமாவது அபூர்வம்தான்!”  என்றார்.
download
காந்திஜி வியப்புடன் சொன்னார்: ”நான் தென்னாப்பிக்காவில் இருந்த போது ”இந்தியன் ஒபினியன்” நடத்திக்கொண்டிருந்தேன். அப்போது மாற்றாக சுமார் 200 பத்திரிகைகள் வந்து கொண்டிருந்தன. நான் அவற்றை மிகவும் கவனமாய்ப படிப்பேன். அவற்றிலிருந்து ஏதாவது செய்தி எடுப்பதற்கு முன்பு இதனால் வாசகருக்கு உண்மையிலேயே பயன் உண்டு என்று தெரிந்துதான் எடுத்துக் கொள்வேன். பத்திரிகை பொறுப்பை ஏற்பவன் தன் பொறுப்பை மிகவும் கடமை உணர்வுடன் ஈடேற்ற வேண்டும். பத்திரிகைக் தொழில் என்ன? எல்லாத் தொழிலிலுமே இந்தக் கடமையுணர்வு தேவை. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? சரியா, இல்லையா?” என்றார்.
பிரபு சற்றே வெட்கத்துடன், ”ஆம் உண்மைதான். ஆனால் ”பாம்பே கிரானிக்கிள் ஆசிரியர் குழாத்தில் இருக்கும் எனக்கு  அந்த வேலை செய்யவே வாரத்தின் நாள் எல்லாம் போய்விடுகின்றன. பிறகு இதை மிகவும் விரைவில் முடிக்க வேண்டி நேர்ந்து விடுகிறது” என்றார்.
காந்திஜி, “இதற்கெல்லாம் உங்களுக்கு சன்மானம் எவ்வளவு கொடுக்கப்படுகின்றது? என்று கேட்டார்.
பிரபு, “ ஒரு பத்திக்கு பத்து ரூபாய்க் கணக்கில் கிடைக்கிறது” என்றார்.
ஒரு பத்தி பத்து அங்குலம் தான் இருக்கும். அதுவும் பத்து பாயிண்டு எழுத்துக்கள் கொண்டது. ஆகவே கணக்குப் பார்த்தால் நூறு அல்லது நூற்றைம்பது ரூபாய் அவருக்குக் கிடைத்து வந்தது. காந்தி அடிகள் தனக்குள் கண்க்குப் போட்டுப் பார்த்துவிட்டு ”கிரானிக்கிளில் வேலை செய்வதற்கு எவ்வளவு கிடைகிறது?” என்று கேட்டார் காந்திஜி.
“மாதம் நானூறு ரூபாய்” என்றார் பிரபு.
காந்தி அடிகள் சற்ற நிதானித்து, “யங் இந்தியா” வுக்காக நீங்கள் பணம் வாங்கிக் கொள்வது சரி என்று படுகிறதா உங்களுக்கு? இந்தப் பத்திரிகை பணம் ஈட்டும் இதழல்ல என்ற நீங்கள் அறிவீர்களை அல்லவா? இது தேசபக்தியின் தொண்டுவேலை. இதன் மூலம் அதன் செலவுக்குக் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருக்கும்போது இதை நடத்துகிறவர்கள் பளுவைக் கூட்டுவது உங்களுக்கே சரியாகத் தோன்றுகிறதா?” என்றார்.
”உரிமையாளர்கள் விரும்பிக் கொடுப்பதையே நான் வாங்கிக் கொள்கிறேன். நான் பிடிவாதமாக எதுவும் கேட்கவில்லையே!”  என்றார் பிரபு.
காந்திஜி சொன்னார்:, ”சரிதான். இருந்தாலும் நானாக இருந்தால் ஒர் பைசா கூட வாங்கிக் கொள்ள மாட்டேன். உங்கள் முழு நேர வேலைக்குத் தகுதியாக ”பாம்பே கிரானிக்கிள்’ காரர்கள் ஊதியம் தந்து விடுகிறார்கள். ‘யங் இந்தியா’வுக்குச் செய்வது ஒழிந்த நேரத்தில் செய்கிற வேலை! முழு நேரத்துக்கும் ஒரு இடத்தில் சம்பளம் கிடைக்கும் போது இடையில் செய்யும் வேலைக்கும் ஊதியம் வாங்குவது சரியில்லை. அதை எதிர்பார்க்கவும் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்படித்தானில்லையா?” என்றார்.
பிரபு மிகவும் பணிவுடன்  தலையை அசைத்தார், ஒத்துக்கொண்டதற்கு அறிகுறியாக.