சிட்னி: சென்னை முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில், முன்கூட்டியே டிக்ளேர் செய்யாததன் மூலமாக, ஒரு முக்கிய உளவியல் அனுகூலத்தை பெறுவதற்கு தவறிவிட்டார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் என்று விமர்சித்துள்ளார் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் இயான் சேப்பல்.

அவர் கூறியுள்ளதாவது, “முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி முன்கூட்டியே டிக்ளேர் செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த அணிக்கு மிக முக்கியமாதொரு உளவியல் அனுகூலம் கிடைத்திருக்கும்.

இப்படி செய்வதால், உங்களின் வலிமையான பேட்டிங் லைனைக் கண்டு எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்று இந்தியாவுக்கு சவால் விடுவதாய் அமைந்திருக்கும். அந்த சவால், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மேற்கொள்ளும் முடிவுகளிலும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கும்.

ஆனால், அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய இலக்கை செட் செய்தபோதும், ஆல்அவுட் ஆகும்வரை காத்திருந்தார்கள்.

ஒரு கேப்டனாக பல விஷயங்களில் ஜோ ரூட் முன்‍னேறியிருந்தாலும், உளவியல் காரணிகளில் இன்னும் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது” என்றுள்ளார் அவர்.