வாஷிங்டன்: ஜோ பிடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியான நீரா தாண்டன் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபராக பிடன் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகை அலுவலக மேலாண்மை மற்றும் நிதி குழு இயக்குநராக நீரா தாண்டன் பொறுப்பேற்பார் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. ஒரு வேளை அவர் பொறுப்பேற்றால் அமெரிக்காவின் நிதிநிலைக் குழுத் தலைவராக தலைமை ஏற்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை பெறுவார்.

இடதுசாரி சார்பு கொள்கையுடைய நீரா தாண்டன், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, கிளின்டன் ஆகியோரின் ஆலோசகராக இருந்தவர். பிடன் குழுவில் முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கி தலைவரான ஜேனட்  எல்லன் கருவூலச் செயலாளராகவும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பொருளாதார வல்லுநர் சிசிலியா ரூஸ், பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சில் தலைவராக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீரா தாண்டன், எல்லன் ஆகியோரின் நியமனம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. பிடன் நிர்வாகக் குழுவில் இம்முறை  அதிக பெண்கள் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.